Showing posts with label விஞ்ஞானம். Show all posts
Showing posts with label விஞ்ஞானம். Show all posts

Sunday, July 26, 2009

மனித மூளை விற்பனைக்கு..!


தலைப்பைப் பார்த்ததும் குழப்பிப் போய் இருப்பீர்களே. ஆம்.. செயற்கையாக தயாரிக்கப்பட்ட மூளைகள் நாளை விற்பனைக்கு வரலாம் என்பது போல செய்தி ஒன்று வந்திருக்கிறது.

செயற்கை முறையில் மனித மூளையைப் போன்ற மூளையை உருவாக்க விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில் இருந்து நீல மூளை திட்டத்தின் (Blue Brain Project) கீழ் முயன்று வருகின்றனர். அவர்கள் தற்போது விடுத்திருக்கும் அறிவிப்பின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித மூளையை ஒத்த மூளையை தாம் செயற்கை முறையில் தயாரித்து விட முடியும் என்று கூறியுள்ளனர்.

மென்பொருட்கள் கொண்டு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான குறும் இலத்திரனியல் சுற்றுக்களால் ஆன மூளைக்கலங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ள neocortical column கொண்டு ஆக்கப்பட உள்ளதாம் இந்த மூளை. ஏலவே இதற்கான மென்பொருள் நிலை வடிவம் பெறப்பட்டு விட்டதாம்.

ஒருவேளை இந்தச் செயற்கை மூளை தயாரிக்கப்பட்டால் அது உலகில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2 பில்லியன் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்கின்றனர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்.

ஏற்கனவே எலிகளின் மூளையில் உள்ள கூறுகளுக்கு ஒத்த செயற்கையான கூறுகளை விஞ்ஞானிகள் தயாரித்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செயற்கை மூளை தயாரிக்கும் முயற்சி வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்.

நன்றி : விடுப்பு

Thursday, July 23, 2009

வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி


ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு.

Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்பி உட்பூச்சாக பூசப்பட்டிருக்கும். இப்போது பீதியைக்கிளப்பி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிர் உயிரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தக்கருவியைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான வைரஸ்நோய்கள் வேகமாகப்பரவுவதை தடுப்பதற்காக இதுபோன்ற விரைவான சோதனைக்கருவிகள் அவசியம் இல்லையா?


வைரஸ்கள் இருப்பதைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி என் ஏ மூலக்கூறுகள் இவற்றையும் இந்தக் கருவியைக்கொண்டு கண்டுபிடிக்க இயலும். இக்கருவியை பயன்படுத்துவோருக்கு சிறப்புப்பயிற்சிகள் ஏதும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.


இந்தக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி ஒரு சின்னஞ்சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளிஉணரும் ‘சில்லு’ (chip) ஆகும். இரண்டாவது பகுதி எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு (portable detector) ஏற்பியாகும். ‘சில்’லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த துளைகளின் உட்புறம் நுண் உயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாக பூசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண் உயிரிகளுடன் அனுப்பப்படுகிறது. ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் மாறுபடுகிறது. இக்கருவியில் பெறப்படும் அளவீடுகள் மிகநுண்ணியதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரஸை இனங்காணுவது மிக எளிதான காரியம். மேலும் ஒவ்வொரு வைரஸிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருக்கும்.

நன்றி: விடுப்பு

Sunday, April 5, 2009

பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் தீவிரம்




நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.


இந்த ஆராய்ச்சியில் பொருள்களை அல்லது மனிதர்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்தும் இறுதிக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பொருள் அல்லது மனிதனைச் சுற்றியுள்ள ஒளிக்கதிர்களை விலகிச் செல்ல செய்வதன் மூலம் அந்தப் பொருளை அல்லது அந்த மனிதனை கண் பார்வையிலிருந்து மறையச் செய்ய முடியும். அதாவது ஆற்றின் நடுவே இருக்கும் பாறையிலிருந்து தண்ணீர் விலகிச் செல்வது போல ஒளிக்கதிர்களை அந்த பிம்பத்திலிருந்து விலகச் செய்ய முடியும் என்று தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் மூத்த விஞ்ஞானி சியாங் சாங் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்யும்போது கண் பார்வையிலிருந்து அந்த பொருளை முற்றிலுமாக மறைத்துவிடலாம்.

இதுபோன்று ஒரு பெரிய கப்பலையோ அல்லது டாங்கியையோ மறையச் செய்வதன் மூலம் போரில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பொருள்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Thursday, April 2, 2009

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!



தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Oven களில் வெப்பத்தை உண்டாக்க heater கள் இருக்கும்.

மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Oven இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

micro மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Ovenமூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ - வேவினால் அசைக்க இயலாது.

எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில்வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven இனுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் -- மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven இல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven இனுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத்தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் - வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற - அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

எனவேதான், Microwave Oven களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

Friday, March 27, 2009

உலக வெப்பமுறுதல் விளைவு எதிர்பார்த்ததை விட தீவிரமானது

எதிர்பார்த்ததை விட உலக வெப்பமுறுதலால் ஏற்படும், சுற்றுச்சூழல்களுக்கு பாதமாக அமையும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும் என்று உலக வெப்பமுறுதல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள முதன்மை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2000 - 2007 வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட புதிய தரவுகளின் படி, வளிமண்டலத்தில் நிகர அளவில் அதிகரித்து வரும் காபனீரொக்சைட் மற்றும் மெதேன் வாயுக்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் இந்த நிலை தோன்றி இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெருமளவு சுவட்டு எரிபொருட்களை மின்சாரத் தேவைக்காக எரித்து வருகின்றன. இச் செயற்பாடு அதிகளவு காபனீரொக்சைட்டை வளிமண்டலத்துக்குள் வெளித்தள்ளுக்கின்றது.

அயனமண்டலக் காடுகள் உலர்ந்து வருகின்றன என்றும் இதனால் காட்டுத்தீ போன்றவை ஏற்பட்டு பெருமளவு தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்படிவுகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்

நன்றி : விடுப்பு