Sunday, May 24, 2009

ஆண்களுக்கு எங்கும் சோதனை தான்; பெண்களே நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்கள்


இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களை விட நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் அதிகம் என்று கனடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரினாம வளர்ச்சியில் இயற்கை பெண்ணுக்கு அளித்துள்ள முக்கிய பொறுப்பான வளமான சந்ததியை உருவாக்குதல் என்ற நோக்கத்தை திறம்பட நிவர்த்தி செய்ய பெண்களை நோய்களின் தாக்கத்திலின்றும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகிறது.

அதற்காகவே அமைந்தது போல பெண்களின் பெண்மைக்கு முக்கிய காரணமான ஈஸ்ரோஜன் (Oestrogen) எனும் ஓமோன் (female sex hormone) அவர்களில் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியையும் அதிகரிக்கச் செய்வது இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓமோன், Caspase-12 எனும் நோய் எதிர்ப்புத் தாக்கத்தை குறைக்கும் நொதியத்தை (enzyme) உருவாக்கும் Caspase-12 மரபணு அலகின் தொழிற்பாட்டை தடுப்பதன் மூலம் பெண்களில் குறித்த நொதியத்தின் உருவாக்கத்தை நிறுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ஆனால் ஆண்களில் மேற்குறிப்பிட்ட ஓமோன் இல்லாத காரணத்தால் அவர்கள் தடிமன் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் நோய்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும், பக்ரீரிய நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும் பெண்களை விட கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

இயற்கையில் மட்டுமன்றி சுகாதார வாழ்விலும் ஆண்களை விட பெண்களுக்கே அநேக மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகவும் முன்கூட்டியும் கிரமமாகவும் வழங்கப்படுகின்றன. பல நோய்கள் ஆண்களைப் அதிக அளவில் பீடிக்க அவர்கள் மீது கட்டாய கிரமமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையும் ஒரு காரணமாகும்.

இதன் காரணமாகவோ என்னவோ இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: