Wednesday, May 20, 2009

புற்றுநோய் கலங்களை பரவ விடும் ஜீன் கண்டுபிடிப்பு


புற்றுநோய் உடலின் ஓரிடத்தில் உருவானால் அது அங்கிருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு அல்லது பகுதிகளுக்கு பரவும் இயல்பைக் கொண்டது. இதனாலேயே அதனை பூரணமாகக் குணப்படுத்த முடியாமல் அதிக புற்றுநோய் மரணங்கள் ஏற்படுகின்றன.

எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து மார்பகப் புற்றுநோய்க் கலங்கள் மூளைக்கும் பரவ அனுமதிக்கும் மரபணு அலகை (ஜீனை-Gene) ஆய்வாளர்கள் கண்றிந்துள்ளனர்.

வழமையாக மூளையில் காணப்படும் மிக நுட்பமான இரத்த நுண்குழாய்கள் கொண்டமைக்கப்பட்ட குருதி-மூளைப் பாதுகாப்பு வேலிகள் மூளையினுள் நுண்குருமிகள் உட்பட எமது உடலில் சுற்றியோடும் குருதியில் உள்ள கூறுகளைக் கூட வடிகட்டலின்றி அனுமதிப்பதில்லை.

ஆனால் மார்பகப் புற்றுநோய் கலங்கள் எப்படியோ மூளைக்குள் ஊடுருவி விடுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட ஒரு மரபணு அலகு தான் அதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

ஏலவே மார்பகப் புற்றுநோய் கலங்கள் சுவாசப்பைக்குள் ஊடுருவி இரண்டாம் நிலை புற்றுநோய் தாக்கம் ஏற்பட அனுமதிக்கும் மரபணு அலகுகள் இரண்டு இனங்காணப்பட்டுள்ள நிலையில் இந்த மரபணு அலகு (ST6GALNAC5)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மரபணு அலகின் தொழிற்பாடு காரணமாகவே புற்றுநோய் கலங்கள் மூளையின் குருதி நுண்குழாய்களில் ஒட்டிக் கொண்டு அதன் பின் அங்கிருந்து மூளையின் இழையப்பகுதிக்குள் நகர்ந்து பெருக ஆரம்பித்துவிடுகின்றனவாம்.

இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் ஆரம்பக்கட்டத்தில் எலிகள் மட்டத்தில் இருப்பினும் எதிர்காலத்தில் புற்றுநோய் தாக்கம் கண்ட கலங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர்வதைத் தடுக்க மருந்துகளை கண்டறிய இது நல்ல அடிப்படையாக அமையும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புற்றுநோயை பூரணமாகக் குணப்படுத்துவதில் அது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு பரவி விடுவதே மிகச் சவாலான அம்சமாக இருந்து வருகிறது.
நன்றி - விடுப்பு

1 comment:

Suresh said...

மிக உபயோகமான பதிவு நண்பா